tamilnadu

img

தருமபுரியில் வாக்குகள் எண்ணும் பணியில் 500 பேர் - மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, மே 21-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 500 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி தெரிவித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமை, தொடக்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசுகையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதியன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.மேலும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் அமைக்கப்படும். இதில், பாலக்கோடு 19 சுற்றுகள், பென்னாகரம் 21 சுற்றுகள், தருமபுரி 22 சுற்றுகள், பாப்பிரெட்டிப்பட்டி 23 சுற்றுகள், அரூர் (தனி) 22 சுற்றுகள், மேட்டூர் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.மேலும், சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாப்பிரெட்டிப்பட்டி 23 சுற்றுகள், அரூர் (தனி) - 22 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும். மேசைக்கு தலா 3 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். சட்டமன்ற தொகுதிக்கு தபால் வாக்கு எண்ணுவதற்கு தலா 2 மேசைகள் வீதம் அமைக்கப்படும். வாக்குகள் எண்ணும் பணியில் சுமார் 500 பேர் ஈடுபடவுள்ளனர். இதேபோல், சுமார் 900 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நுண்பார்வையாளர்கள் கண்காணித்து தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ம.ப.சிவன் அருள், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ம.காளிதாசன், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியக்கோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;